யார் இந்த மஹாமுடி - பகுதி 1
வழக்கம் போல இவ்வாண்டும் திருவோணப் பண்டிகை வந்து போயிருக்கிறது. ஓணத்தைப் பற்றிய பல கதைகள் சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் மலையாள நாட்டில் எல்லோரும் ஏற்றத்தாழ்வின்றி ஓரினமாய் வாழ்ந்திருந்த மாவேலி மன்னன் நாடாண்ட நினைவைக் கொண்டாடத்தான் இந்த ஓண விழா என்று சொல்லப்படுகிறது. ஜாதி மத வேற்றுமை பாராமல், மாவேலி மன்னனையும் அன்று நிலவியிருந்த ஒரு உணர்வையும் நினைவில் கொள்ள மட்டுமே ஓணப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பல ராமாயணக் கதைகள் உள்ளது போலவே, பரவலாகப் பேசப்படும் நம்பப்படும் கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு கதை மாவேலியைப் பற்றியும் இருக்கத்தானே செய்யும்? நான் ஒருமுறை சீர்காழி சட்டநாதர் கோவிலுக்குச் சென்றபோதுதான் இக்கதையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். சட்டநாதர் கோவிலே சைவ, வைணவச் சர்ச்சைகளுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் ஒரு கோவில் தானே! நம் நாட்டில் இந்து மதம் என்ற ஒரு மதம் உருவாக்கப்பட்டபோதே, யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் சைவமும் வைணவமும் அதில் ஈருயிர் ஓர் உடலாக்கப்பட்டுவிட்டது. ஒன்று மற்றொன்றை விழுங்கியே தீர வேண்டும்; அதில் வைணவம் வெற்றி பெறத்தான் வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து தப்பத்தான் கர்நாடகத்தில் உள்ள சைவ மதத்தினரான லிங்காயத்துகள் தங்களை ஒரு தனிப்பட்ட மதத்தவராக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் கேட்கவிருக்கும் இக்கதையில் மாவேலி எனும் மகாபலிக்கு பதிலாக 'மகாமுடி' என்றும், கதை நடக்கும் காலம் 1480-களில் என்றும் சொல்லப்பட்டாலும், இக்கதைக்கு மகாபலியின் வரலாற்றோடு நம்பகமான ஒரு தொடர்பு இருப்பதை கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 'ஒரு வடக்கன் வீரகாதா' எனும் வித்தியாசமான வரலாற்றுப் படத்தை விட நம்பகமான ஒரு கதையாகத்தான் இருக்கிறது, 'மகாமுடி தி கிரேட்' (Mahamudi The Great).
ஒரு நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால், கதாபாத்திரங்களின் மன வெளிப்பாடுகளிலிருந்த்தான் நாம் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும். திரையில் தெரியும் அவற்றை வாசிக்கவும் செய்யலாம். வாருங்கள், 'மகாமுடி தி கிரேட்'.
கேரளா, கொச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிவன் கோவில். அதன் முன் காவலாக நிற்கும் ஒரு நந்தி. ஒரு அதிசயம் நிகழ்கிறது; ஆம், அந்த நந்தி பேசத் தொடங்குகிறது:
"என் வயது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஊகிக்கவாவது முடியுமா என் வயதை? 500-க்கும் மேற்பட்ட வருடங்களைக் கடந்து நிற்பவன் நான். கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிவபகவான் முன்னால் நான் இப்படி அமர்ந்திருக்கிறேன். இனியும் என்னால் பேசாமல் இருக்க முடியாது. ஆம், வாய் திறந்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது! என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும் சில நல்லுள்ளங்களிடம், இம்மலை நாட்டை ஆண்ட ஒரு மாமன்னனைப் பற்றி இனியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது."
"ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் இக்கோவிலைக் கட்டி, இமயத்திலிருந்து கொண்டு வந்த ஒரு சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து, என்னையும் இங்கு அமரச் செய்த தன்னிகரில்லா மாமன்னன் மகாமுடிதான் அவர். இந்நாட்டைக் காக்கவும், மக்களுக்காகவும், தான் கொடுத்த வாக்கைக்காப்பாற்றுவதற்காகவும் தன்னையே அர்ப்பணித்த அந்த மாமனிதனைத்தான் நீங்கள் எல்லாம் மாவேலி என்றும் மகாபலி என்றும் அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்."
கொல்லம் ஆண்டு 600-களின் பிற்பாதியில் (15-ஆம் நூற்றாண்டில்) இம்மலையாள தேசத்தை மகாமுடி ஆண்ட அக்காலத்தில், மக்கள் எல்லோரும் ஏற்றத்தாழ்வின்றி ஓரினமாய், ஒரு குடும்பமாய், பட்டினியின்றி மகிழ்வுடன் செழுமையாய் வாழ்ந்திருந்தனர். அன்று இந்த மலைநாடு ஒரு சொர்க்க பூமியாய்த் திகழ்ந்தது.
கொல்லம் ஆண்டு 661, கி.பி. 1485-ல் ஒரு நாள்... அன்றுதான் அதிகாலை கண்ட ஒரு கனவால் நிலைகுலைந்து போன மகாமுடி, நிம்மதியின்றி அறையில் அங்கிங்குமாய் நடந்து கொண்டிருக்கிறார். வாருங்கள், அந்த நாளுக்குள் சென்று காரணம் அறிவோம்.
539 வருடங்களுக்கு முன்புள்ள அந்த நாள். மகாமுடியின் அரண்மனையில் உள்ள அவரது அறை. மகாமுடியின் துணைவி மகாதேவி, தன் கணவனின் கவலைக்கான காரணம் அறிய அருகே சென்று அவரிடம் பேசுகிறாள்:
"சுவாமி, வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் சிவ வழிபாடு நடத்திய பின்பும் தங்களது முகத்தில் வருத்தமும் குழப்பமும் விட்டகலாததன் காரணம்தான் என்ன? வேதனை தரும் அவ்வெண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை எனில், என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சுவாமி."
"கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன் தேவி. விடியும் முன் கண்ட ஒரு பயங்கரமான கனவில் சிக்கித் தவிக்கும் என் மனதை, வழிபாட்டிற்குப் பின்பும் என்னால் அதிலிருந்து விடுவிக்க முடியவில்லை தேவி. கனவில் தோன்றிய ஒவ்வொரு காட்சிகளையும் நினைவுபடுத்தி, அதன் காரணங்களுடன் அது தரும் முன்னெச்சரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஐயமே இல்லை, இக்கனவு எல்லாம் வல்ல ஈசன் எனக்கு வரவிருப்பதை முன்கூட்டிக் காட்டும் ஒரு அறிகுறியேதான்."
அதைக் கேட்ட மகாதேவி: "சுவாமி, கண்ட கனவு என்னவென்று தயைகூர்ந்து கூறுங்களேன்?"
அதற்கு மகாமுடி: "உறுதியாகக் கூறத்தான் வருகிறேன் தேவி. கட்டிக் காக்க வேண்டிய இந்நாட்டையும், என் மக்களையும், இவ்வரண்மனையையும் துறந்து, சந்நியாசியாய் நானும் என்னுடன் தேவியும் கிழக்குத் தொடர்ச்சி மலை நோக்கிப் பயணிக்கிறோம்."
"மலை உச்சியிலிருந்து தூரத் தெரியும் நம் நாட்டைப் பார்க்கையில், வேலிகளாலும் பள்ள மேடுகளாலும் சீரழிந்த நம் மலைநாடு கண்ணில் படுகிறது. ஏற்றத்தாழ்வு பாராமல் ஓரினமாய் வாழ்ந்த நம் மக்கள் ஒருவரை ஒருவர் இகழ்ந்து, தாக்கி, போரிடுவதைப் பார்த்துப் பதைத்த நான், 'கலகம் வேண்டாம்' என்று கதறுகிறேன். உடனேயே கால்களுக்குக் கீழே உள்ள மண் பிளந்து பாதாளத்தில் விழுந்து விடுகிறேன். உதவிக்காகக் கூக்குரலிடும் என் செவியில், எங்கிருந்தோ கேட்கும் ஒரு அசரீரி 'நேரம் வந்துவிட்டது' என்று சொல்கிறது தேவி."
அதைக் கேட்ட மகாதேவி: "ஓ சிவ சிவா! இதனுடைய பொருள்தான் என்ன? அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியோ, கேட்கத் தேவையான ஆர்வமோ சிறிதும் இல்லை. எனினும் அவற்றைக்கேட்காமல் இருக்க என்னால் இயலவில்லை சுவாமி. எல்லாம் வல்ல இறைவா! மகாதேவா! என் சுவாமி சொல்வதையெல்லாம் கேட்கவும், அதைத் தாங்கிக் கொள்ளவும் தேவையான சக்தியை எனக்குத் தருவாயாக!"
அதற்கு மகாமுடி: "ஆம் தேவி, என் வேண்டுதலும் அதுவே. எங்கும் நிறைந்த இறைவன் மகாதேவனிடம் என் கனவின் பொருளையும் அறிகுறியையும் தாங்குவதற்கான சக்தி மட்டுமல்ல, வரும் நாட்களில் நிகழவிருக்கும் எல்லா விபரீத சூழல்களையும் எதிர்கொண்டு வாழக்கூடிய மனதையும் சக்தியையும் என் தேவிக்கு நல்க வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டிருக்கிறேன் தேவி."
https://www.youtube.com/watch?v=XyUZDrtrxP4
=================================================================
யார் இந்த மஹாமுடி - பகுதி 2
மகாமுடி தொடர்கிறார்: "உள்நாட்டுக் கலவரமோ,
வெளிநாட்டுப் படையெடுப்போ ஏதோ ஒன்று காரணமாக நாம் நம் அரியாசனத்தைத் துறக்க வேண்டிய
நிலை வரும்."
அதைக் கேட்ட மகாதேவி: "சிவ சிவா! மகாதேவா!
வேண்டாம்... வேண்டாம் சுவாமி, அப்படிச் சொல்லாதீர்கள்! இதுபோன்ற கேட்கக்கூடாத வார்த்தைகளைச்
சொல்லாதீர்கள், வேண்டாம்!"
அதைக் கேட்ட மகாமுடி: "தேவி, என்ன இது?
உணர்ச்சிவசப்பட வேண்டாம் தேவி. நிகழவிருப்பது கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். யாராலும்
அவற்றை மாற்றவோ தடுக்கவோ முடியாது. மகாதேவன் சிலருக்கு மட்டும்தான் அவற்றை உணரும் திறனைத்
தருவார்; அவர்கள் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படித்தான் நாம் அதை அறிய வந்திருக்கிறோம்.
அதனால் நடக்கவிருப்பதை எதிர்கொள்ள நம்மைத் தயாராக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை."
"நடப்பதெல்லாம் காலச்சக்கரத்தின் சுழற்சியால்
நிகழ்வன. காலமும் கடல் அலைகளும் யாரையும் காத்திருக்காது; யாரையும் பொருட்படுத்தாது.
இவையெல்லாம் தேவிக்கும் தெரிந்தவைதானே?"
அதைக் கேட்ட மகாதேவி: "ஆம் சுவாமி, எனக்குத்
தெரியும். காலமும் கடல் அலைகளும் யாரையும் பொருட்படுத்தாது, யாருக்காகவும் காத்திருக்காதுதான்.
ஆனால் நான் ஒரு பெண்; நான் ஒரு மனைவி; நான் ஒரு தாய்..."
மகாமுடி குறுக்கிட்டு: "ஆம், ஆனால் அதே
நேரத்தில் தேவி ஒரு அரசியும்கூட! மலைநாட்டை ஆளும் அரசி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும், நம்முடைய ஒவ்வொரு செயலும் மற்ற எல்லோருக்கும் ஒரு
முன்உதாரணமாகத் திகழ வேண்டியது அவசியம். எனக்குத் தொடர்ந்து பேச அனுமதி தேவி."
"ஒருவேளை போர் அல்லது உள்நாட்டுக் கலவரம்
அன்றி வேறு ஏதேனும் ஒரு நிகழ்வும் நிகழலாம். அந்நிகழ்வு எனக்கு அரியணை துறந்து துறவு
மேற்கொள்ளும் சூழலை உருவாக்கலாம். அதே நிகழ்வு மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்துப்
பகைவர்கள் ஆக்கலாம். வெறுப்பும் வேற்றுமை பாராட்டலும் நாம் சுவாசிக்கும் காற்றைப் போல்
எங்கும் நிறைந்து நின்று, எல்லோரையும் அவற்றிற்கு அடிமையாக்கலாம்."
"அந்நிலை தொடர்ந்து அடுத்து வரும் தலைமுறையினரையும்
சீர்குலைக்கலாம். വെള്ളைப் பூனை, தானும் கருப்புப் பூனைக்குப் பிறந்த
12 பூனைகளில் ஒன்றுதான் என்பதை மறந்து, சாம்பல் மற்றும் கருப்புப் பூனைகளின் மேல் உயர்வு
மனப்பான்மை பாராட்டத் தொடங்கலாம்."
அதைக் கேட்ட மகாதேவி: "சுவாமி, நம் மகன்
மகாவீரன் இந்நாட்டை ஆளும்போது, அவனால் இவ்வேற்றுமை பாராட்டும் தன்மையையும் வேறுபாட்டு
மதில்களையும் உடைத்தெறிந்து, முந்தைய நன்னிலைக்கு நம் நாட்டைக் கொண்டுவர இயலாதா?"
அதைக் கேட்ட மகாமுடி: "மகாவீரன் தன்னால்
இயன்றவரை மக்களிடம் படரும் வெறுப்பையும் வேற்றுமைகளையும் களைய முயல்வான். ஆனால் பாவம்,
தன் குடும்பத்தில் நிலவும் வேற்றுமையைக் கூடக் களைய முடியாத நிலையில் அவனால் சுழலத்தான்
முடியும்."
"என் கனவில் மகாவீரனை அவனுடைய ஏறத்தாழ
எட்டு வயதுடைய மகனுடன் கண்டேன். மகாதேவனை அல்லாத வேறு ஒரு தெய்வத்தை வழிபடும் குழந்தை;
தன் தந்தையை விடத் தனக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அடிபணியும் நற்பெயரற்ற
ஒரு குழந்தை. தாயின் வயிற்றில் வளரும்போதே பிற தெய்வ வழிபாட்டிற்கு இணங்கி வளர்ந்த
சேய் அது. தான் கண்மூடித்தனமாய் நம்பிப் பின்பற்றும் தன் ஆசான்களின் சூழ்ச்சி அறியாமல்,
சிங்கத்தின் சீற்றத்தால் தன் தந்தை உயிரிழக்கத் தான் ஒரு முக்கிய காரணமாகும் பரிதாப
நிலை பற்றிப் பேரிலும்கூடச் சிந்திக்க இயலாத சிறுவன் அவன்!"
அதைக் கேட்ட மகாதேவி: "சிவ சிவா! மகாதேவா!
இடித்தீயாய்ச் செவியில் விழும் இவ்வார்த்தைகளைக் கேட்கும் வண்ணம் நான் செய்த பாவந்தான்
என்ன? அதுவும் தாங்கள் வாயிலாக நான் பெற்ற மகனைப் பற்றி... சுவாமி, ஏன் நம் மகாதேவன்
நம் வாழ்வின் கடைசி நாட்களில் நம்மை இப்படிச் சோதிக்கிறார்?"
அதைக் கேட்ட மகாமுடி: "தேவி, மகாதேவனின்
திருவுள்ளம் இதுவே! இயற்கையின் இயல்பும் விதியின் விளையாட்டும் இதுவே! சிறு பூச்சியை
உணவாக்கும் தவளை; தவளையை விழுங்கும் பாம்பு; பாம்பைக் கொன்று வயிற்றை நிரப்பும் கீரி;
அக்கீரையை உணவாக்கும் மனிதன்..."
"இங்கு மனிதனும் மற்றவை ஒவ்வொன்றும் செய்வதெல்லாம்
அவரவர் செய்ய வேண்டியதைத்தான்; இதற்காக அவர்கள் யாருமே சாபம் ஏற்கப் போவதில்லை. இவ்வுலகில்
உருவாகும் ஒவ்வொன்றும் காலப்போக்கில் வேறொன்றின் பாகமாக மாற வேண்டியவையேதான். அதுபோலத்தான்
எல்லா நம்பிக்கைகளும். கடவுள் நம்பிக்கையும் காலப்போக்கில் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுத்தான்
ஆக வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் மனிதர்கள் எங்கிருந்தேனும் அந்நேரத்தில்
திடீரெனத் தோன்றுவார்கள். அதற்கான சூழல்கள் எங்கும் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்."
"அப்படி நம் இறை உணர்வும் வழிபாட்டு முறைகளும்
இங்கிருந்து நீக்கப்படப் போகும் நேரம் வந்துவிட்டதோ என்ற ஐயம் எனக்குத் தோன்றுகிறது
தேவி. நம்மால் முடிவது, நாம் இங்குச் செய்ய வேண்டியது, பதறாமல் போருக்குத் தயாராவதுதான்!
உறுதியுடன் முழு மனதாய் பயமின்றி இறுதிவரை போராடத்தான் வேண்டும். வெற்றி தோல்விகளைத்
தீர்மானிப்பது இறைவன். வெற்றி அல்லது வீரமரணம் இரண்டில் ஒன்று நிகழ்ந்தே தீரும். எனவே,
என் மனதிற்கினிய தேவி, மனமுறைய வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் உறையும் மகாதேவாலயத்திற்குச்
சென்று வழிபட்டு வருவோம். வருக தேவி, என்னுடன் போய் வருவோம்."
அதைக் கேட்ட மகாதேவி: "சுவாமி, என்னால்
இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மகாவீரனின் மகனே மகாவீரனின் மரணத்திற்குச் சான்றாவான்
என்றால்..."
அதைக் கேட்ட மகாமுடி: "நாம் கண்ட கனவிலிருந்து
அப்படித்தான் என்னால் அனுமானிக்க முடிகிறது தேவி. நம் மகன் மகாவீரன் வேற்று மதத்தவளான
ஒரு பெண்ணைத்தான் மணம் முடிக்கிறான். வீரனின் மனைவியும் மகனும் அவர்கள் மதத்தையும்,
நம் வீரன் நம் மதத்தையும் பின்பற்றித்தான் ஒன்றாய் வாழ்வார்கள்."
"காலப்போக்கில் வீரனின் இயல்பான பிறமத
வெறுப்பு அவர்களிடையே சிறிய இடைவெளியை உண்டாக்கிவிடும். என் புரிதலின்படி, மதவெறியர்களின்
சூழ்ச்சிக்கிணங்கி, வீரனின் மகன் சொல் கேட்டு ஒரு சிங்கத்தின் கூண்டை உடைப்பதன் விளைவாக,
அச்சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிர் நீக்கும் ஒரு அவலநிலை நம் வீரனுக்கு வரும் என்று
தோன்றுகிறது. ஆனால் அம்மரணத்தின் பின்னாலுள்ள வஞ்சனை பற்றிய புரிதல் வீரனின் மனைவிக்கும்
மகனுக்கும் இருக்காது. அம்மதத்தின் இயல்பு அப்படி. சித்தர்களைப் போல் அல்லாமல், அவர்களது
மதபோதகர்களின் தலையீடுகள் அரசாட்சியிலும் இருக்கத்தான் செய்யும்."
அதைக் கேட்ட மகாதேவி: "ஏன் சுவாமி, ஏன்
இதுபோன்ற நிகழ்வுகள் நம் வாழ்வில்?"
அதைக் கேட்ட மகாமுடி: "இப்புவியில் பிறந்த
நாம் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே மரணம் என்பது அச்சப்பட வேண்டிய, சபிக்கப்பட
வேண்டிய ഒന്നല്ല. மரணம் உண்மையிலேயே நம்மைச் சிவலோகத்திற்கு இட்டுச் செல்லும் ரதமேதான்!
அதனால்தான் மரணம் மர்மமாக, அது வரும்வரை நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்தே இருக்கிறது
தேவி."
"நம் மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம்
இப்படித் தேவியுடன் நாம் பகிரக் காரணம், தேவியால் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள
முடியும் என்பதோடு, வரும் நாட்களில் நம்மைக்காத்திருக்கும் கடினமான நிகழ்வுகளை எல்லாம்
தைரியமாக எதிர்கொள்ளவும் முடியும் என்ற என் நம்பிக்கையும்தான். நம் எதிர்பார்ப்பு வீணாகாது;
அப்படித்தானே தேவி?"
அதைக் கேட்ட மகாதேவி: "ஆம் சுவாமி, ஐயம்
வேண்டாம்! எது நிகழ்ந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திறன் என் சுவாமியின் எண்ணப்படி
எனக்கு இருக்கிறது."
அதைக் கேட்ட மகாமுடி: "அப்படியெனில் வருக
தேவி, மகாதேவாலயம் சென்று மகாதேவனை வணங்கி வருவோம்!"
நந்தி மீண்டும் தோன்றிப் பேசத் தொடங்குகிறது:
"மகாமுடி தான் கண்ட கனவைப் பற்றி மகாதேவியுடன்
பேசிய அந்நாளுக்குப் பின், சில மாதங்களுக்குப் பிறகு தன் சேனைத் தலைவனான கண்ணப்பனுடன்
ஒரு நிகழ்வைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். வாருங்கள், நாமும் அதைக் கேட்போம்."
மகாமுடி: "அப்படியாக அந்த முனிவரை நினைக்கும்
போது கண்ணப்பனின் மனத்தைப் பயம் கவ்வுகிறது. கண்ணப்பனின் கணிப்பில் அவர் 'ஆட்டின் தோலிட்ட
செந்நாய்'. எனக்குப் புரியவில்லை, குழப்பமாக இருக்கிறது கண்ணப்பா! சில வருடங்களுக்கு
முன்பு நம் சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய கைலாய மலையிலிருந்து எடுக்கப்பட்ட சிவலிங்கத்தை
மானசரோவரில் நீராட்டி, தனியே தன் தலையில் சுமந்து வந்த கண்ணப்பன்தானா இப்படி ஒரு சந்நியாசி
வருகிறார் என்பதைக் கேட்டதும் மனம் பதைத்து நடுக்கம் கொள்வது?"
கண்ணப்பன்: "வேந்தே, என் வார்த்தைகளில்
பயத்தின் ஏதேனும் துடிப்பு இருந்ததெனில் என்னை மன்னிக்க வேண்டும். தரையில் ஊர்ந்து
செல்லும் நச்சுப்பாம்பு எவ்வளவு சிறிதாயினும், அதன் நச்சு ஒரு யானையைக் கொல்லும் திறம்
வாய்ந்தது. அதுபோலத்தான் இந்த முனிவரும்! அவர் எந்நாட்டுக்குச் சென்றாலும் அந்நாட்டைத்
தன்னாக்கி, அந்நாட்டின் மன்னவன் தன் மணிமுடியை இழக்கச் செய்கிறார்."
"அதனால் அரசே, ஒன்று அவரைக் கொல்ல எனக்கு
அனுமதி தாருங்கள்; இல்லையேல் நம் புண்ணிய பூமியில் அவரது கால் பதியாமல் இருக்க ஆவன
செய்யுங்கள்! வருமுன் காக்க வேண்டியதன் அவசியத்தை வள்ளுவன் அடிவரையிட்டுச் சொல்லியிருக்கிறானே?"
மகாமுடி: "எல்லாம் நிகழ்த்தும் மகாதேவனின்
இச்சை நாம் அம்முனிவரைச் சந்திக்க வேண்டும் என்றாகின், அதை நாம் தடுக்கவே முடியாது.
என் உள்ளம் உணர்த்துவதும் அத்தவமுனிவரைத் தவிர்க்க இயலாத ஒருவர் என்றுதான். மரணமும்
அழிவும் இப்புவியில் வாழும் சகல உயிரினங்களுக்கும் அகற்ற முடியாத ஒன்று என்பது போல்,
என்னை மணிமுடி இழக்கச் செய்யவல்லவர் அந்த முனிவர் எனில், அதைச் செய்ய நான் அவரை அனுமதித்தே
தீர வேண்டும். வேறு வழியில்லை."
"பிறகு கண்ணப்பா, ஆட்சியைக் கைப்பற்றவும்
அதை நிலைநிறுத்தவும் அந்த முனிவர் கையாளும் தந்திரங்கள்தான் என்ன?"
கண்ணப்பன்: "அத்தந்திரங்கள் எல்லாம் நாம்
அறியாதவை, முற்றிலும் வேறுபட்டவை! கலங்கிய நீரில் மீன் பிடிப்பதைப் போல் ஒன்று. அப்படி
அவர் கால்பதிந்த நாட்டையெல்லாம் தன்னாக்க அவருக்கு உதவும் தந்திரம் அது. விதைத்த உடனே
வேரூன்றிச் செழித்து வளரும் ஒரு நச்சு விதையை விதைக்க வல்லவர் அவர்."
"நாம் நம் நாட்டில் அறிவையும் திறனையும்
அளந்துதானே தகுதியைத் தீர்மானிக்கிறோம்? அங்கு நாம் பேதம் பார்ப்பதில்லை. அதனால்தானே
இடையனின் பூசை மற்றும் வழிபாட்டு நெறியறிந்து பூசாரியாக முடிகிறது? இங்கே அப்படித்தானே
வேடப்புதல்வனான நான் மலைநாட்டு வேந்தரின் படைத்தலைவனாகி நிற்கிறேன்?"
"ஆனால் அவர்களுடைய வழிமுறைகளில் இடையர்கள்
இடையர்களாகவே பிறந்து, வளர்ந்து, மடிய வேண்டும்; அதை மாற்றக் கூடாதாம், அது பாவமாம்,
'இடைய முத்திரை'யாம் அது! ஒரு தலைமுறையின் அறிவு, திறன், ஆசைகளைக் காற்றில் பறக்கவிட்டு,
இப்படி முத்திரை குத்திக் கூட்டில் அடைப்பது எவ்வளவு கொடுமை!"
"எனவே குருகுமணனைத் தடுத்தே தீர வேண்டும்!
இல்லையேல் நம் நாட்டவரின் ஒற்றுமை, உழைப்பு, செழுமையை அழிக்கும் திறன் வாய்ந்த, 'வேற்றுமை
விரோதப் புற்றுநோய்க்கு'க் காரணமாகும் வேற்றுமை பாராட்டல் எனும் விஷச்செடியை இங்கு
வேர் இறங்கச் செய்து விடுவார்."
மகாமுடி: "வட மற்றும் கிழக்கு தேச மன்னர்கள்
அவரை எப்படிச் சமாளித்தார்கள்? அவர்களிடம் குருகுமணனால் வெற்றி பெற முடிந்ததா?"
கண்ணப்பன்: "குருகுமணனும் அவரது ஆட்களும்
அதிதூரத்தில் உள்ள வடநாட்டிலிருந்துதான் வருகிறார்கள். நூற்றாண்டுகளுக்கு முன்பு சதிகாரச்
சகோதரர்களின் சதியால் உயிர்நீத்த வாலி மற்றும் சிராவணனைக் கொன்ற ராமனின் நாட்டுக்கு
அருகாமையில் உள்ள நாடுகளிலிருந்து மட்டுமல்ல... அவர்கள் ராமன், கிருஷ்ணன் போன்ற அவர்களை
ஆண்ட பண்டைய மன்னர்களைத் தெய்வமாகக் கண்டு வழிபடவும் செய்கிறார்கள்."
"நூற்றாண்டுகளுக்கு முன்பே சாளுக்கியர்களை
அவர்கள் தங்களுக்குக் கீழ்ப்படிய வைத்துவிட்டார்கள்; ஆனால் சோழ, பாண்டிய மன்னர்களிடம்
அவர்களால் வெற்றி காண முடியவில்லை. ஆனால் நம் கிழக்கு மலைகளைக் கடந்ததும் அவர்களுக்கு
எல்லா குறுநில மன்னர்களிடமும் வெற்றி மேல் வெற்றிதான்! அவர்களில் பலரும் குருகுமணனுக்குக்
கீழ்ப்பணிந்து விட்டார்கள். எதிர்த்த ஓரிருவர் இஸ்லாம் போன்ற பிரதேச மதத்தைத் தழுவி
அவரது பிடியிலிருந்து தப்பியும் விட்டார்கள்."
"குருகுமணனும் அவரது ஆட்களும், 'கிழக்கு
மலைக்கும் மேற்கு கடலுக்கும் இடையில் உள்ள மலைநாட்டை அவர்களது முன்னோரான குரு பரசு,
கோடாரியால் கடலில் நின்றும் மீட்டுத் தன் முன்னோர்களுக்குத் தானமாகத் தந்தார்' என்று
சொல்லி, மலைநாட்டின் நாடாளும் உரிமை தங்களுக்கே என்று உரிமை பாராட்டுகிறார்கள் அரசே!
அவர்களது இக்கூற்றில் ஏதேனும் உண்மை உண்டா?"
மகாமுடி: "நியாயமற்றது! மடமையன்றி மற்றொன்றல்ல
இது. பேராசைக்காரர்களான அவர்களது தனிப்பேராசைக்கு அளவே இல்லை! ஆயிரத்திற்கும் அதிகமான
வருடங்களுக்கு முன்பு உலகத்தின் வடகோடியிலிருந்து குடியேறிய அவர்களது முன்னோர்கள்,
அங்கு வாழ்ந்த பலரைத் தென்கோடிக்கு விரட்டியவர்கள். இப்போது தென்னகத்தையும் கைப்பற்ற
வந்திருக்கிறார்கள்; வருகின்றவர்கள் அவர்களுடைய பின் தலைமுறையினர், அதுதான் வித்தியாசம்."
"பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த 'பிதியாக்களைப்'
போலத்தான் இவர்கள். 'பிதியாக்கள்' எனும் பூசாரிகள் இறைவனின் பிரதிநிதிகள் என்று சொல்லி,
மெதுவாக இறைவனுக்குப் பதிலாகவே மாறிவிட்டார்கள். காலப்போக்கில் இறைவனையே மறந்து, மக்கள்
பிதியாக்களை வணங்கித் துதிபாடத் தொடங்கி, அப்படி அம்மதங்கள் எல்லாம் மறைந்தே போய்விட்டன."
"உண்மையில் நம் மதத்தில் வேரூன்றிய இவர்கள்
அதுபோன்ற பிதியாக்களேதான்! உலக மதங்களில் மூப்படைந்த நம்முடைய இறைமையை, மதத்தை இல்லாமல்
செய்யப்போகிறவர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."
"பிறகு குரு பரசு... அவர் உண்மையில் தவவலிமை
பெற்ற மாமுனி. ஆளத் தெரியாத சிற்றின்பப் பிரியர்களான மன்னர்களையும் அவர்களது பின் தலைமுறையினரையும்
கொன்று குவித்தவர். ஆனால் அவர் மற்றவர்களிடம் அன்பு காட்டியவர்."
"சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மத்வாச்சாரியார்
எனும் முனிவர்தான் மார்பில் பூநூல் அணிந்து இறைத்தொண்டு செய்யும் முறையைக் கொண்டு வந்தவர்.
ஆனால் அது பூசை மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு மட்டும் தேவையான ஒன்றாக இருந்தது. அவர்
ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்; பிற்காலத்தில் அவரது சோம்பேறிச் சீடர்கள் அப்பூநூலை
அவர்களது சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்துவார்கள் என்று! நம் முன்னோர்கள் அருளிய
பல நூல்களையும் திருத்தியும் மாற்றியும் எழுதி, பாமர மக்களைச் சுரண்டி, நம் இறைமையை
இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அவர் எண்ணியிருக்கவே மாட்டார்."
"இங்கு நிகழப்போகும் பேராபத்தை எண்ணி
நம்மால் வருந்தத்தான் முடியும். நூற்றாண்டுகளுக்கு முன்பு முசிரி துறைமுகத்தைக் கடல்
விழுங்கி அழித்தபோது, செய்வதற்கு ஒன்றுமின்றிப் பதைத்துப் பதறி நின்றது போல், இங்கும்
வரவிருக்கும் அழிவைத் தடுக்க முடியாமல் செய்வதறியாது கண்கலங்கி நம்மால் நிற்கத்தான்
முடியும்."
கண்ணப்பன்: "மன்னர்பெருமானுக்கு இத்தகையவர்களைப்
பற்றி இத்துணை தெளிவு இருக்கும்போது, ஏன் சோழ, பாண்டிய மன்னர்கள் செய்தது போல் நாமும்
அவர்களை நம்மிலிருந்து அகற்றி, நம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது?"
மகாமுடி: "அதற்கும் மகாதேவனின் அருள்
வேண்டுமே! சோழ, பாண்டியர்களுக்கு அருளிய இறைவன், ஏனோ அதற்கு இவ்வடியேனைத் தேர்ந்தெடுக்கவில்லை.
400 வருடங்களுக்கு முன்பு ராஜராஜனைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டச் செய்தது மகாதேவன்.
கடந்த நூற்றாண்டுகளில் சோழ, பாண்டிய மன்னர்களை நூற்றுக்கணக்கான சிவாலயங்களை நிறுவ வைத்ததும்
அதே மகாதேவன்தான். புண்ணியம் செய்த அவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்த சிவபெருமான் தான்,
அவர்களுக்கெல்லாம் அவற்றைச் சிறம்படச் செய்ய உதவியதும்!ற்று மதங்கள் ஒன்றும் அந்நாடுகளில்
வளர வாய்ப்பில்லாத புண்ணிய பூமி அவை. இனிவரும் நூற்றாண்டுகளிலும் நம் இறைமாண்பு மற்றும்
பண்பாட்டை உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் பறைசாற்றவல்ல கோபுரங்களைக் கொண்ட கோவில்கள்
அவை!"
"சித்தர்களான நம் முன்னோர்கள், 'எப்படி
அண்ட அகிலாண்டங்களை இயக்கும் நடராஜனின் திருநடனத்தைக் கண்டுணர்ந்தார்கள்' என்பதை உலகுக்கு
உணர்த்தும் கோவில்கள் அவை. வரும் நூற்றாண்டுகளில் உலகைக் கட்டியாளப் போகும் மேலைநாடுகள்
கண்டறியப்போகும் அறிவியல், வானவியல் அறிவையெல்லாம் திருமூல சித்தர் போன்ற நம்முடைய
முன்னோர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்திருந்தார்கள் என்பதைக் கண்டு இவ்வுலகமே
வியப்பில் ஆழப்போகிறது."
"ஆனால் கண்ணப்பா, நம் பங்களிப்பு இதில்
இல்லையே என்றோ, நம் கோவில்களின் கதி என்ன ஆகும் என்றோ எண்ணி வருந்த வேண்டாம். சோழ,
பாண்டிய மன்னர்கள் கட்டியது போல் வானளாவிய கோபுரங்களைக் கொண்ட கோவில்கள் நம் நாட்டில்
இல்லை எனினும், இங்கும் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம்
குருகுமணனும் அவரது ஆட்களும் அவர்களுடைய இறையைக் குடியிருத்தி உருமாற்றம் செய்ய நூற்றாண்டுகள்
தேவைப்படும். எனவே மனம் தளராமல் அவர்களை எதிர்கொள்வோம். குறுகிய மனமும் சிந்தையும்
உள்ளவர்களைத்தான் துன்ப துயரங்கள் வெற்றி கொள்ளும். நம்போல் பயமறியாத விரிந்து பரந்த
மனமுடையவர்களைத் துன்ப துயரங்களால் வெல்லவே முடியாது."
கண்ணப்பன்: "அப்படியே ஆகட்டும் அரசே!
வேந்தே, வேறொரு மனதிற்கு இதமளிக்கும் நிகழ்வு பற்றியும் சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
நேற்று மகாவீர இளவரசர், மதம் பிடித்த ஒரு யானையின் தாக்குதலிலிருந்து ஒரு முனிபுதல்வியைக்
காப்பாற்றினார். அவர்கள் எனது முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு விட்டார்கள்
வேந்தே! திரும்பும்போது வழியில் என்னால் இயன்றவரை பேசியும் மகாவீர இளவரசரை அக்காதல்
வலையிலிருந்து மீட்க முடியவில்லை. இளவரசர் அம்முனிமகளை மறக்க இயலாமல் தவிக்கிறார்.
தயைகூர்ந்து இச்சூழலில் அடியேன் இனி என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள் மன்னா."
மகாமுடி: "மகாவீர குமாரன் அந்த முனிமகளை
மணக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால், நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்
கண்ணப்பா. அந்த முனிமகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து வர வேண்டும்."
"நாம் இதுவரை விவாதித்த எல்லாம்—மகாவீரனின்
திருமணம் உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றியும்—ஒரு முன்னெச்சரிக்கை கனவு வாயிலாக எனக்கு
மகாதேவன் நல்கியிருந்தார் கண்ணப்பா. மிகவும் கடினமான, கசப்பான வாழ்வின் பாகங்களைச்
சந்திக்க வேண்டிய நேரம் நம்மை நெருங்குகிறது என்று எனக்குத் தோன்றுகிறது."
"கண்ணப்பா, நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய' மகாதேவனின் இச்சைக்கு இணங்கவே கடந்து போகின்றன. எனவே எதையும் தாங்கும் இதயம் உள்ள ஒருவனாய் கண்ணப்பன் மாற வேண்டும். இனி நம் வாழ்வில் நடக்கவிருப்பவை எல்லாம் மகாதேவனின் இச்சைப்படி நடக்க வேண்டியவையே என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்."
கண்ணப்பன்: "அப்படியே நடந்துகொள்கிறேன்
அரசே. விடைபெற அனுமதி வேண்டுகிறேன் வேந்தே! மாமன்னர் மகாமுடி வாழ்க வாழ்க!"
மகாமுடி: "போய் வா கண்ணப்பா! எங்கும்
நிறைந்திருக்கும் ஈசன் அருள் எப்போதும் கண்ணப்பனுக்குக் கிடைக்கட்டும்."
https://www.youtube.com/watch?v=67jApjhtays
================================================================
யார் இந்த மஹாமுடி - பகுதி 4
'மகாமுடி தி கிரேட்' எனும் இந்த நாடகம் மூன்று
பகுதிகளைக் கொண்டது.
அதன் முதல் பகுதியில், மன்னர் மகாமுடி தான்
கண்ட கனவை முன்வைத்து, அதன்பின் அவர்களது வாழ்வில் நிகழ வாய்ப்புள்ள விபரீத நிகழ்வுகளைப்
பற்றித் தன் வாழ்க்கைத்துணையான மகாதேவியுடன் பேசுகிறார்.
இரண்டாவது பகுதியில், மாமன்னன் மகாமுடி தன்
சேனாபதியான கண்ணப்பனுடன் நடத்தும் உரையாடல் இடம்பெறுகிறது. முக்கால நிகழ்வுகளைப் பற்றியும்
அங்கெல்லாம் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனான மகாதேவனின்
இச்சைப்படி நடப்பவை; ஆதலால் நடக்கவிருப்பவை நடந்தே தீரும் எனும் நிலை வந்தால், நடக்க
அனுமதிப்பதன்றி வேறொன்றும் செய்வதற்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
இவை இரண்டையும் முந்தைய பாகங்களில் பார்த்தோம்.
இந்த நான்காம் பாகத்தில் (மூன்றாம் பகுதியில்), மன்னன் மகாமுடிக்கும் அவர் ஆண்ட மலைநாட்டிற்கும்
உண்மையிலேயே நடந்தது என்ன என்பதைக் கண்டறிவோம். வாருங்கள்!
நந்தி மீண்டும் பேசத் தொடங்குகிறது:
"பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள்...
இதனிடையே எதிர்பாராத பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதன் காரணமாக மாமன்னன் மகாமுடியும்
மகாராணி மகாதேவியும் தங்களது அரியணையையும் அரண்மனையையும் துறந்து, துறவறமேற்று வனவாசம்
செல்லத் தயாராகி நிற்கிறார்கள்."
"அவர்களுக்கு அருகே மகன் மகாவீரனும்
அவரது மனைவி கங்காதேவியும் நிற்கிறார்கள். கூடவே கண்ணப்பனும், 'மலைநாட்டிற்குள் ஒருபோதும்
அனுமதிக்கக் கூடாது' என்று கண்ணப்பன் வாதிட்ட குருகுமணனும் நிற்கிறார்கள். மாமன்னன்
மகாமுடி அங்குள்ள அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்."
மகாமுடி: "அன்பு செலுத்த மட்டுமே அறிந்த
என் அருமை மலைநாட்டு மக்களே! உங்களிடமிருந்து விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. கூடவே
இப்புண்ணிய பூமியாம் மலைநாட்டிலிருந்தும், எனது அருமை மைந்தன் மகாவீரனிடமிருந்தும்,
அவனது வாழ்க்கைத்துணையான கங்காதேவியிடமிருந்தும்..."
"ஆனால், எனக்கு அதற்காக வருத்தமோ வேதனையோ
சிறிதளவும் இல்லை. உங்கள் அனைவரது நலனுக்கும் செழுமைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்
குகைகளில் 'நமச்சிவாய' மந்திரம் சொல்லி வணங்கி வாழ்வைத் தொடரத்தானே போகிறேன்! அதனால்
மகிழ்ச்சி மட்டும்தான் மனதில்."
"குருகுமணா, நான் தாங்களுக்கு அளித்த
வாக்குப்படி அரியணை துறந்து துறவறம் ஏற்றுவிட்டேன்; கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டேன்.
இனி நீங்களும் உங்கள் வாக்குறுதியைக் காக்க வேண்டும். காப்பீர்கள் அல்லவா?"
குருகுமணன்: "அரசே, ஐயம் வேண்டாம்!
அடுத்த ஆண்டு தாங்கள் தங்களது மலைநாட்டையும் மலைநாட்டு மக்களையும் காண வருவீர்கள் இல்லையா?
அப்போது நானும் என் சீடர்களும் இம்மலைநாட்டில் நிகழ்த்தவிருக்கும் மாற்றங்களை நேரில்
கண்டு புரிந்து கொள்வீர்கள்."
"மக்களுக்கு அவர்களது அறிவுக்கும் திறமைக்கும்
உகந்த வேலைகள் கொடுக்கப்படும். எல்லா கோவில்களிலும் ஆகம விதிகளுக்கு ஏற்ப பூஜைகளும்
வழிபாடுகளும் நடத்தப்படும். ஒரு உயிரும் பலியிடப்பட அனுமதிக்கப்படாது. சோம்பேறிகளும்
யாசகர்களும் கோவில்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். பதிலாக, கோவில்கள் வேதம்
மற்றும் புராணங்கள் கற்கவும் வாசிக்கவும் மட்டுமே உபயோகிக்கப்படும் ஓரினமாய் மாறிவிடும்.
அதுமட்டுமல்ல, இறையருள் பெற்ற குழந்தைகள் மட்டுமே அங்கு அவற்றைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள்."
"அங்கு நாங்கள் செய்வதெல்லாம் இப்புவியின்
நன்மைக்கும் இறை இச்சைக்கும் இயைந்தவையாகவே இருக்கும். அப்படி இம்மலைநாட்டை இயற்கையும்
பருவ காலங்களும் பஞ்சபூதங்களும் ஒன்று சேர்ந்து அனுக்கிரகம் பொழிகின்ற 'இறைவனின் சொந்த
நாடாக' (God's Own Country) மாற்றி இருப்போம்!"
"மாமன்னர் மகாமுடி இம்மலைநாட்டிற்காகவும்
மலைநாட்டு மக்களுக்காகவும் கிழக்குத் தொடர்ச்சி மலைக் குகைகளில் மனமுருகிப் பிரார்த்தனை
செய்யும்போது, நானும் என் சீடர்களும் இம்மலைநாட்டு மக்கள் அம்மேன்மையை அடைய ஆவன செய்துகொண்டிருப்போம்.
உறுதியாக இப்புவியைக் காத்தருளும் பெருமாளின் கருணையும் கடாட்சமும் என்னையும் என் சீடர்களையும்
இம்மலைநாட்டைப் பெருமாளின் சொந்த நாடாக்கி மாற்ற உதவும். தாங்களுக்கு அதில் எந்தவித
ஐயமும் வேண்டாம்."
மகாமுடி: "எங்கள் ஆத்மாவில் குடியிருக்கும்
மகாதேவனை, எங்களது இதயத்திலும் இந்த அகிலாண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் சதா ஆனந்த நடனம்
புரிந்து இயக்கும் அகிலாண்டேஸ்வரனைத் துதித்து வாழ்வோர்கள் நாங்கள். தேவாரமும் திருவாசகமும்
பாடி, 'நமச்சிவாய' மந்திரம் சுவாசித்து வாழும் மலைநாட்டு மக்களான நாங்கள், 'எல்லா உயிரினங்களும்
ஒன்றே' எனும் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்."
"ஆனால் நீங்களோ அந்த ஒன்றை, ஏகத்தை,
ஏகாம்பரத்தை இரண்டாக்கும் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றி, அதை 'ஜீவாத்மா, பரமாத்மா'
என இரண்டாகக் கண்டு வாழ்பவர்கள். சிறப்புள்ள ஜீவாத்மாவால் மட்டுமே பரம்பொருளான பரமாத்மாவை
அடைய முடியும் என்றும், இச்சிறப்பு உங்களது பெருமாளின் நெற்றியிலிருந்து பிறந்த சிலருக்கு
மட்டுமே உரியது என்றும் சொல்லி மக்களிடையே வேற்றுமை பாராட்டுகிறீர்கள். அப்படி ஒன்றான
மனிதகுலத்தைப் பாகுபாடு சொல்லிப் பிரிக்கிறீர்கள்."
"உங்களது இச்சிந்தனையும் செயல்பாடுகளும்
எங்களது நம்பிக்கைக்கு எதிரானது; எங்களால் உள்வாங்க முடியாத ஒன்றும்கூட. அதனால் இத்தத்துவத்தை
நீங்கள் எங்களுக்குள் ஒருபோதும் திணிக்க முயலக்கூடாது! அத்வைதத்தைக் கடைப்பிடிக்கும்
சைவ சமயத்தவரான மலைநாட்டு மக்களை, துவைத மத நம்பிக்கை உள்ள வைணவர்களாக மாற்ற ஒருபோதும்
முயற்சி செய்யக்கூடாது."
"இங்கு சைவம் மட்டுமல்ல... சமணமும்,
பௌத்தமும், கிறித்தவமும், முகமதியமும் உண்டு. எனவே அவரவர்களுடைய இறை உணர்வுடன் வழிபாட்டு
முறைகளுடன் வாழ எல்லோரையும் அனுமதிக்க வேண்டும்."
குருகுமணன்: "வேந்தே, எங்களை தவறாகப்
புரிந்து வைத்திருக்கிறீர்கள். எங்களது குரு மத்வாச்சாரியார், தாங்களது குருவான சங்கராச்சாரியாரின்
தத்துவங்களை அங்கீகரித்தவரேதான். நீங்களும் நாங்களும் இறையுணர்வு மற்றும் இறைநம்பிக்கையான
ஒரு விருட்சத்தைப் பற்றித்தான் பேசுகிறோம்."
"நீங்கள் சொல்வது, 'இறைநம்பிக்கையான
அம்மரமும், அதைத் தாங்கி நிற்க உதவும் வேரான இறைநம்பிக்கை பாராட்டும் மனிதர்களும் ஒன்றே'
என்பது. ஆனால் நாங்களோ, 'பலமில்லாத வேர்கள் போதாதென்றும், அவ்வேர்களை உறுதியுள்ளதாக்கச்
செழிப்பான மண்ணும் நீரும் உரமும் தேவை' என்றுதான் சொல்கிறோம். பலமில்லாத வேர்களும்
பலமான வேர்களும் ஒன்றல்ல. உறுதியான வேர்களுக்கு உரியதைக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டியது
அவசியம். அப்படி அம்மரத்தைக் காப்பதுதானே நம் இருவரது நோக்கமும்!"
மகாமுடி: "நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை
காண்கிறோம்; நீங்கள் ஒற்றுமையில் வேற்றுமை காண்கிறீர்கள்! காலப்போக்கில் வேற்றுமை பாராட்டல்
அதிகமாகி, வேர்களின் எண்ணிக்கை குறைந்து, மரமே சரிந்து தரைதட்டக்கூடும். அதனால் எனக்கென்னவோ
உங்களது இந்தச் செயல்பாடுகளில் ஐயப்பாடு உண்டுதான்."
"நீங்களும் உங்கள் சீடர்களும் நன்னோக்கோடு
செய்யும் பல செயல்களும், நூற்றாண்டுகளுக்குப் பின் செழுமையாக வாழும் உங்கள் பின்தலைமுறையினரின்
மனதை மாசுபடுத்தலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை மறந்து விடாதீர்கள்! அப்போது
அவர்கள் மற்றவர்களை எல்லாம் அகற்றவும், ஏன் அடிமைகள் ஆக்கவும் வாய்ப்புண்டு."
"ஒருவேளை எங்களது மகாதேவனுக்குப் பதிலாக
உங்கள் பெருமாளையே மாற்றி நிலைகொள்ளச் செய்யவும் வாய்ப்புண்டு. அப்படி எங்களது சைவ
சமய நம்பிக்கையை வேரற்றுப் போகவும் செய்யலாம்! அதிகாரம் கையாளும் அவர்கள் தங்களது இச்சைப்படி
மத நூல்களையும் புராணங்களையும் திருத்தி எழுதலாம்; புதிதாக எழுதிச் சேர்க்கவும் செய்யலாம்.
சில வேளைகளில் மற்றவர்களது மத நூல்களை அழித்து, அவர்களது இறை நம்பிக்கையையே இல்லாமல்
செய்யலாம். இவையெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, தாங்கள் தங்களது சீடர்களிடம்
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும். அது மிக
மிக அவசியம், மறந்து விடாதீர்கள்!"
குருகுமணன்: "என் சீடர்கள் எப்போதும்
இம்மலைநாட்டு மக்கள் படர்ந்து வளர உதவும் நெடும் தூண்களாக நிற்பார்களே அன்றி, அவர்களைத்
தின்று உணவாக்கித் தூங்கும் வண்ணத்துப்பூச்சிப் புழுக்களாக மாறமாட்டார்கள், அது உறுதி!
நானும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குகிறேன் மன்னா."
"கொடுத்த வாக்குறுதியைக் காக்கச் சொந்த
அரியணையையும் நாட்டையும் துறந்து துறவறம் செல்லும் தாங்களுக்கும், தங்களது வாழ்க்கை
துணைக்கும் எப்போதும் இப்புவியாளும் எங்கள் பெருமாளின் அருள் உண்டாகும் வேந்தே!"
மகாமுடி: "நன்றி குருகுமணா! அகிலாண்டேஸ்வரனான
மகாதேவன் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவார்."
(அதன்பின் தன் மகனை நோக்கி)
"அன்பு மகனே மகாவீரா, நான் சொன்னவைகளையெல்லாம்
மறவாமல் மனதில் கொள்ள வேண்டும். நம் மலைநாட்டு மக்களையும் குருகுமணனின் சீடர்கள் மற்றும்
இனத்தவரையும் வேற்றுமை பாராமல் ஒன்றாய்க் கண்டு இம்மலைநாட்டை ஆள வேண்டும்."
"உன் வாழ்க்கைத்துணையான கங்காதேவிக்கு
நான் எவ்விதம் உன் தாய்க்கு அன்பு செலுத்தி வாழ்ந்தேனோ, அதுபோல் அன்பு செலுத்தி உடன்
வாழ வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதே நன்னாளில் என் உயிராம் இம்மலைநாட்டின் செழுமையையும்,
இம்மலைநாட்டு மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையையும் கண்டு மகிழ நான் இங்கு வரத்
தவறமாட்டேன்."
மகாவீரன்: "இப்புவியில் என்னைப் போல்
இந்த அளவு அவல நிலைக்கு ஆளான ஒரு அரசன் இருக்க வாய்ப்பில்லை! வஞ்சிக்கப்பட்டு அகாலமாய்
அரியணை இறங்கும் ஒரு மாமன்னனின் மகனாய் பிறந்ததால், அகாலத்தில் அருகதையற்ற அரியாசனத்தில்
அரைமனதுடன் அரியணை ஏறும் மைந்தனானேன்! இப்படிப்பட்ட இழிநிலையை எதிர்த்து ஒன்றும் செய்யவியலாத
இந்த அவலநிலை என்னை நிலைகுலையச் செய்திருக்கிறது. தந்தையின் கட்டளைக்கு அடிபணிதலன்றி
என்னால் வேறென்ன செய்ய முடியும்?"
"ஆனால் வரும் நாட்களில் நான் நேரடி
எதிர்கொள்ளவிருக்கும் பல எதிர்பாராத இடர்களையும் இன்னல்களையும் இல்லாமல் செய்ய என்னால்
இயலுமா என்ற அச்சம் என்னை அச்சுறுத்துகிறது. வித்தியாசமான இறை உணர்வுகளும், முன்னுக்குப்
பின் முரண்பாடுடைய சமயச் சம்பிரதாயங்களும் உள்ள மக்களை ஒற்றுமையாய் வாழ வழிவகை செய்து
நாடாள்வது எப்படி? அதுவும் தாங்கள் இல்லாத நிலையில்?"
மகாமுடி: "மகனே மகாவீரா, மனம் தளரக்கூடாது.
தைரியத்தோடு வரும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும். எல்லாம்
வல்ல மகாதேவன் மகாவீரனை இச்சூழலில் அரியணை ஏற்றி இருக்கிறார் என்றால், அதற்கு இத்தருணத்தில்
ஏற்ற ஒருவன் மகாவீரன் என்பதாலால்தான்! அதற்கான தகுதியும் ஆளுமையும் உனக்கு உண்டு என்பதால்தான்!
அதுமட்டுமல்ல, நம் கண்ணப்பன் எப்போதும் உடனிருந்து உதவி புரிவான்."
(கண்ணப்பனைப் பார்த்து)
"கண்ணப்பா, நான் உரைத்த ஒவ்வொன்றையும்
மறவாது மனதில் கொள்ள வேண்டும். என் நிழலாய் இருந்து எனக்குச் செய்த அதே உதவிகளை, என்
புதல்வனும் நம் நாட்டு வேந்தனுமான மகாவீரனுக்குச் செய்ய வேண்டும்."
கண்ணப்பன்: "உத்தரவு வேந்தே!"
மகாமுடி: (கங்காதேவியை நோக்கி) "அன்பு
கங்காதேவி, நான் சொன்னவைகளையெல்லாம் மறவாது மனதில் கொள்ள வேண்டும். இப்போது என் அன்பு
மருமகள் கங்காதேவி, மகாவீரனின் மனைவி மட்டுமல்ல; இந்த மலைநாட்டின் மகாராணியும்கூட!
அதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும், மறந்துவிடக் கூடாது."
"அதனால் சொல்லிலும் செயலிலும் அவ்விரு
பொறுப்புகளும் அதன் வெளிப்பாடுகளும் மேலோங்கி நிற்க வேண்டும். தன் நேர்பாதியை உமாதேவிக்கு
வழங்கிய உமாபதியாம் மகாதேவனை வழிபடுபவர்கள் நாங்கள். அதனால்தான் எங்கள் வாழ்க்கைத்துணைகள்
எங்களுக்கு உத்தம பாதியாகிறார்கள். எனவே கங்காதேவி, சிவனுக்குச் சக்தி போல் மகாவீரனின்
சக்தியேதான்! அதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்."
கங்காதேவி: "அப்படியே ஆகட்டும் பிரபு!
பெருமாளை வழிபடும் பக்தி மார்க்கத்தில் வாழ்ந்ததால், நான் என் சேவையையும் கடமையையும்
பற்றி நன்கறிவேன். எங்கள் தாய் லட்சுமிதேவி, தன் பதியான அனந்த சயனத்தில் இருக்கும்
விஷ்ணுதேவனை அவரது கால்களுக்கு அருகில் அமர்ந்து தன் கடமையை ஆற்றுபவர்."
"அதனால் நான் எப்போதும் என் சுவாமியின்
அடிமை மட்டுமல்ல; எப்போதும் அவருக்குத் துணைவியும் இந்நாட்டின் அரசியுமாய் விளங்கி,
அவற்றிற்கான பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவேன்."
மகாமுடி: "அன்புப் புதல்வி, 'அடிமை'
எனும் அந்தச் சொல் வேண்டாம்! என்றும் என் புதல்வன் மகாவீரனின் உத்தம பாதி—சிறந்த பாதியாகத்தான்
திகழ வேண்டும். என் சிறந்த பாதியான தேவி என்னுடன் துறவறம் பூண்டு வருவது என் அடிமையாக
அல்ல; என் உயிரின், உடலின், ஆத்மாவின் உத்தம பாதி ஆனதால் மட்டுமேதான்!"
கங்காதேவி: "அப்படியே ஆகட்டும் பிரபு!
உரைத்த ஒவ்வொன்றையும் ஒருபோதும் மறவாமல் பின்பற்றி உறுதியாய் வாழ்வேன். எந்தவித ஐயமும்
வேண்டாம்."
மகாமுடி: (கூடி நிற்போரைப் பார்த்து)
"யார் அங்கே? அது யார், பொன்னப்பனா? அவரை இங்கு வர அனுமதியுங்கள். வா பொன்னப்பா!
ஏதேனும் விண்ணப்பம் உண்டா?"
பொன்னப்பன்: (மகாமுடியை வணங்கி) "ஒப்பில்லா
மாமன்னர் மகாமுடி வாழ்க வாழ்க! மாவேந்தருக்கும் மகாராணிக்கும் இறையருள் எப்போதும் உண்டாக
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வேந்தே!"
"கிறித்துவ சமயம் ஏற்று அவ்இறையாண்மையில்
வாழ மாமன்னர் மகாமுடி அனுமதி தந்ததால், இடைநாட்டில் வாழும் எங்களுக்கு வளமான எங்கள்
விளைநிலங்களை மதிப்பிற்குரிய குருகுமணரின் இனத்தார்களுக்குக் கைமாற்றம் செய்யாமல்,
நாங்களே அங்கு வேளாண்மை செய்து வாழ்கிறோம். அதனால் என் போன்ற கிறித்துவ சமயத்தினர்
அனைவரும் அல்லலின்றி வாழ முடிகிறது."
"ஆனால், முற்றிலும் மாறுபட்ட இந்தச்
சூழலில், இனிவரும் நாட்களில் நாங்கள் தனிப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் உண்டு
எங்களுக்கு. எதிர்காலத்தில் தொன்றுதொட்டு பரம்பரையாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் நாங்கள்,
இம்மலைநாட்டில் வந்தேறிகளாய் மாற்றப்பட்டு விடுவோமோ என்ற பயம் இப்போது எங்களிடையே வலுப்பெற்று
வருகிறது வேந்தே!"
மகாமுடி: "வீணான அச்சம் வேண்டாம் பொன்னப்பா!
நாம் குருகுமணனிடம் அவர்களது சமயத்தைப் பரப்ப அனுமதி கொடுத்தேனே தவிர, மற்ற சமயங்களை—குறிப்பாகச்
சைவ, சமண, பௌத்த, கிறித்தவ, முகமதிய சமயங்களைப் பின்பற்றி வாழ்வோரது சமயங்களுக்கும்
வழிபாட்டு முறைகளுக்கும் ஒருபோதும் ஒருவித இன்னல்களும் கொடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறேன்."
"அதனால் குருகுமணரும் அவரது சீடர்களும்
ஒருபோதும் மற்ற சமயத்தவர்களை அச்சுறுத்தவோ, அவர்களுக்கிடையே இவர்களது நம்பிக்கையைத்
திணிக்கவோ முயல மாட்டார்கள். மலைநாட்டின் பல பகுதிகளில் சமத்துவம் பாராட்டும் கிறித்தவ
மற்றும் முகமதிய சமயத்திற்குப் பலரும் மாறுவதாகச் செய்தி வருகிறது. வைணவம் தவிர சைவ,
சமண, பௌத்த சமயங்கள் சமத்துவம் பாராட்டுபவைகளேதான். ஆனால் அவ்விரு சமயங்களைப் போல்
சமயக் கோட்பாடுகளைப் பரப்ப அச்சமயங்கள் முயல்வதில்லை. அதனால் மக்கள் அவ்விரு சமயங்களால்
ஈர்க்கப்படுகிறார்கள்."
"வரும் பதிற்றாண்டுகளில் மேற்கத்திய
நாடுகளிலிருந்து கடல் வாயிலாகக் கிறித்துவ சமயத்தினர் ஏராளமாக வர வாய்ப்புண்டு. வரும்
நூற்றாண்டுகளில் அவர்களது நடை, உடை, மொழி போன்றவை இதேபோல் எல்லோரையும் ஈர்க்க வாய்ப்பு
அதிகம். அதனால் பொன்னப்பா, இன்றைய கிறித்துவ மதத்தவர்களிடம் இந்நாட்களை மறவாதிருக்கச்
சொல்ல வேண்டும். கூடவே பதிற்றாண்டுகளுக்குப் பின் பிற சமயங்களிலிருந்து கிறித்துவ சமயத்திற்கு
வருபவர்களிடம் வேற்றுமை பாராட்டக் கூடாது என்றும், அவர்களுக்கு இது போன்ற அச்சமோ தாழ்வு
மனப்பான்மையோ ஒருபோதும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்ல வேண்டும்."
பொன்னப்பன்: "உறுதியாக வேந்தே! அத்துடன்
வேறொரு விண்ணப்பமும் இந்த பொன்னப்பனுக்கு உண்டு. என் சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும்,
ஒவ்வொரு ஆண்டும் மாவேந்தர் வரும் நன்னாளில் அந்நாளைக் கொண்டாடவும், மகாமுடி மன்னரை
வரவேற்கவும் அனுமதி வழங்க வேண்டும்."
மகாமுடி: "அதனால்தான் நாமும் ஒவ்வொரு
ஆண்டும் ஒரு நாள் இம்மலை நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம்.
அப்போது எல்லா சமயத்தவர்களும் இதில் பங்கெடுக்க வேண்டும்!"
"நாம் வரும் நாளில் இம்மலைநாட்டில்
வாழும் எல்லா சமயத்தவர்களும் ஒன்றுகூடும்போது, 'பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய
முன்னோர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில், ஒரே இறைநம்பிக்கையில் இங்கு வாழ்ந்த ஒரு குடும்பத்தினர்;
ஓர் இனத்தவர்கள்' என்ற ஓர் எண்ணம் வர வேண்டும்."
"அப்படி பல வித்தியாசமான இறைநம்பிக்கைகளில்
வாழும் அவர்கள் மனதில், அத்திபூத்தாற்போல் அன்று ஒரு ஒற்றுமை உணர்வு வர வேண்டும்; அது
என்றென்றும் நிலைபெறவும் வேண்டும். அப்படி இந்த மலைநாடு எல்லாவித மாறுபட்ட இறைநம்பிக்கை
உள்ளோர்களும் ஒற்றுமையாய் மனமகிழ்வோடு கூடி வாழும் நாடு என்பதை இவ்வுலகம் அறிய வேண்டும்."
"நீங்கள் எந்த மொழியில் இறைவனை வேண்டினாலும்,
எவ்வளவு வித்தியாசமான முறைகளில் இறைவனை வழிபட்டாலும், என்னென்ன உருவங்கள் கொடுத்தாலும்,
ஒரு உருவமும் கொடுக்காதிருந்தாலும்... உங்களுடைய பிரார்த்தனையும் வேண்டுதல்களும் உண்மையானதாகவும்
உறுதியுடையதாகவும் இருந்தால், அதை எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு
உறுதியாக அருளாசி வழங்குவார். அகிலாண்டேஸ்வரன் ஒருவனே! எனவே உண்மையான உங்கள் பிரார்த்தனைகளை
வேறு யாரும் கவர மாட்டார்கள், கவரவும் முடியாது. ஏனென்றால் நானும், நீங்களும், மற்றவர்களும்
வழிபடுவது எங்கும் நிறைந்திருப்பதால் எல்லாம் அறிந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவனையேதான்!"
"அதனால் இம்மலைநாட்டில் வாழ்பவர்கள்
ஒருபோதும் இறைவனுக்காக, இறைவன் பெயரால் ஒருவரை ஒருவர் பகைவர்களாக்கிச் சண்டையிடக் கூடாது.
இதை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். அதை நினைவுபடுத்தத்தான் நான் பன்னிரண்டு மாதங்களுக்கு
ஒருமுறை ஒற்றுமையாய் வாழும் உங்களைக் காணத் தீர்மானித்திருப்பதும்."
"இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. தேவி,
புறப்படுவோமா? நீங்கள் எல்லோரும் நம்பி வணங்கும் தெய்வமேதான் நான் வணங்கும் இறைவன்
என்பதால், எந்தவித ஐயமும் இன்றிச் சொல்கிறேன்: எனக்கு மகாதேவனாகவும், உங்களுக்கு உங்கள்
இறைவனாகவும் விளங்கும் எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருளாசி புரிந்து காத்தருள்வாராக!"
(இப்படிச் சொல்லி மகாமுடியும் மகாதேவியும்
துறவறம் செல்கிறார்கள்.)
நந்தி மீண்டும் தோன்றிப் பேச ஆரம்பிக்கிறது:
"500 வருடங்களுக்கு முன்பு நான் கண்ட
காட்சிகளை எல்லாம் உங்களுக்குக் காண்பித்துவிட்டேன். இனி உங்கள் முடிவு, என்ன செய்யப்
போகிறீர்கள்? முடியுமெனில் உங்களைப் போல் அன்பும் அறிவாற்றலும் உள்ள ஒருவரிடம் இந்த
மாமன்னன் மகாமுடியைப் பற்றிச் சொல்லுங்கள்!"
"இம்மலைநாட்டை மட்டுமல்ல, இப்புவியில்
வாழும் எல்லோரையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஏற்று, அன்பும் கனிவும் அரவணைப்புமே
இறைவன் என்று தன் வாழ்வால் விளக்கி வாழ்வாங்கு வாழ்ந்த மாவேந்தன் மகாமுடியைப் பற்றி
அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்!"
https://www.youtube.com/watch?v=dff8xVNEjAA
-------துளசிதரன் வே தில்லைஅகத்து
No comments:
Post a Comment